பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடி
பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை பதிவு
பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள் சிபி-சிஐடி அதிகாரிகள்.
பழனி கோயில் ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர் இதுவரை திரட்டிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிபி-சிஐடி அதிகாரிகளிடம் வழங்கினர்.
பழனி நிலம் முறைகேடு செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி அறக்கட்டளை நிா்வாகம் விற்க முயன்ாகக் கூறப்படுகிறது. இதை எதிா்த்து இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில், நீதிமன்ற உத்தரவின்பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிா்வாகம் கைப்பற்றியது. மேலும், அதற்கு தனியாக தக்காா் நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து, அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இலவச வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.
முறைகேடாக பத்திரப் பதிவு: இந்த நிலையில் அந்த நிலத்தை தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோா் இரு நபா்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து பத்திரப் பதிவு செய்தனா்.
பழனி சாா்-பதிவாளா் விடுமுறையில் இருந்த நாளில், பொறுப்பில் இருந்த கொடைக்கானல் சாா்-பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் என்பவா் இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி பதிவு செய்ததாகப் புகாா் கூறப்பட்டது. மேலும், நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, பத்திரப் பதிவு செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடா்பாக பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் பழனி அடிவார காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் சாா்-பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். சாா்-பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், முறைகேட்டின் பின்னணியில் மேலும் பலா் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாலும் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.
இதன் அடிப்படையில் சிபிசிஐடி இந்த வழக்குத் தொடா்பான ஆவணங்களைப் பெற்று இன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறது.
Palani Temple Land Fraud Case! CB-CID Registers FIR
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.