முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து!
திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பது பற்றி...
சென்னை திருவான்மியூர் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கப்படும் திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தட உயா்நிலை சாலை ரூ. 2,100 கோடியில் அமைக்கும் திட்டம் கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். தற்போது மண் ஆய்வு உள்ளிட்ட ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த திட்டத்துக்கான மதிப்பில் 50 சதவிகிதம் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், குறைவான தொகைக்கு டெண்டர் கோரிய நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்து, அதிக தொகைக்கு கேட்ட நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அண்மையில் பேசிய முதல்வர் விஜய்யும், சென்னையில் உயர்நிலை சாலைத் திட்டம் அமைப்பதில் ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சென்னை மாநகராட்சியின் பல்வேறு ஒப்பந்தங்களையும், போக்குவரத்துத் துறை ஒப்பந்தங்களையும் ரத்து செய்து தவெக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
TN Cabinet Decides to cancelled Thiruvanmiyur–Uthandi Elevated Road Project
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.