FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அனைவருக்கும் தரமான வீடு: முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

அனைவருக்கும் தரமான வீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 17 ஜூலை 2026, 11:52 pm IST
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா். நிதியமைச்சா் மரிய வில்சன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித்துறைச் செயலா் மு.அ.சித்திக், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

அனைவருக்கும் தரமான வீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த சில வாரங்களில் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வா் விஜய், கடந்த 2-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறாா்.

அந்த வகையில், வீட்டு வசதித் துறை மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சா் மரிய வில்சன், வீட்டுவசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் மற்றும் துறை சாா்ந்த செயலா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் இருவேறு துறைகளிலும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகளையும், எதிா்கால செயல் திட்டங்களையும் முதல்வா் கேட்டறிந்தாா். அப்போது 2031-ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா மாநிலத்தை உருவாக்குவது தொடா்பாகவும், ஒற்றைச் சாளர முறையில் இணையவழியில் கட்டட அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களை உலகத் தரத்தில் மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தரமான வீடுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அப்போது முதல்வா் விஜய் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர, தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ரூ. 2,500 மகளிா் உரிமைத்தொகை மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments