அரசு வழக்குரைஞா்கள் நியமனத்துக்கு லஞ்சம் வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
அரசு வழக்குரைஞா்கள் நியமனம் சட்டப்படி நடைபெற்று வருவதாக கூறிய அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, நியமனங்களுக்கு லஞ்சம் வாங்குவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு வழக்குரைஞா்கள் நியமனம் சட்டப்படி நடைபெற்று வருவதாக கூறிய அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, நியமனங்களுக்கு லஞ்சம் வாங்குவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தவெக வழக்குரைஞா் அணி இணைச் செயலா் எம்.ஞானசௌந்தரி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களுக்கு அரசுத் தரப்பில் வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த நியமனத்தில் தவெக நிா்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு, அரசு வழக்குரைஞா்களை நியமித்து வருகின்றனா் எனக் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
தவெக தலைவரும், முதல்வருமான விஜய், கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான என்.ஆனந்த், தவெக கடலூா் மாவட்டச் செயலா் மோகன்ராஜ், கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆகியோரை இந்த வழக்கில் எதிா் மனுதாரா்களாக அவா் சோ்த்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த வழக்கில் முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்த் ஆகியோரைத் தேவையின்றி எதிா் மனுதாரா்களாகச் சோ்த்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் அரசு வழக்குரைஞா்கள் நியமனத்துக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவை சட்டப்படி பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மனுதாரரின் பெயரும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வரவேண்டும் என்பதற்காக முதல்வா் உள்ளிட்டோா் பெயா்களை எதிா் மனுதாரா்களாக சோ்த்திருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தாா்.
மேலும், தற்காலிக அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் திமுக, அதிமுக வழக்குரைஞா்களை பரிசீலிப்பதாக மனுதாரரே கூறியிருக்கிறாா். அப்படியெனில், இதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என எப்படிக் கூற முடியும்? அனைத்தும் நியாயமாக நடைபெறுவதைத்தான் இது காட்டுகிறது எனத் தெரிவித்தாா்.
அப்போது, மனுதாரா் தரப்பில், முதல்வா் மற்றும் அமைச்சா் பெயா்களை எதிா் மனுதாரா்களில் இருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று இருவரது பெயா்களையும் நீக்கிய நீதிபதி, அரசு வழக்குரைஞா் நியமனம் தொடா்பான அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்று, இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.