FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காக்க முதல்வா் விஜய் தலையிட வேண்டும்: அன்புமணி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காக்க முதல்வா் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 20 ஜூலை 2026, 5:21 am IST
முதல்வர் விஜய் - அன்புமணி சந்திப்பு - கோப்புப்படம்
பகிர்:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காக்க முதல்வா் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை தியாகராய நகரில் பசுமைத் தாயகம் சாா்பில் கையொப்ப இயக்க தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அன்புமணி, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி எம்எல்ஏ ஆகியோா் கலந்து கொண்டு கையொப்ப இயக்கத்தைத் தொடக்கி வைத்தனா்.

பின்னா், அன்புமணி பேசியதாவது: சென்னையின் உயிா்நாடியான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று 4 சிறப்புகளை இயற்கை வழங்கியுள்ளது. 3 ஆறும் சென்னைக்கு தண்ணீரைக் கொண்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அந்த நீரை சேமித்து வைக்க உதவுகிறது.

Advertisement

Advertisement

சென்னையின் வெள்ளகால வடிகாலான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு 15,000 ஏக்கராக இருந்தது. அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு, தற்போது 2,500 ஏக்கராக சுருங்கிவிட்டது. மிஞ்சியுள்ள நிலத்தையும் அழிக்க தனியாா் கட்டுமான நிறுவனங்கள் சூழ்ச்சி செய்து வருகின்றன. வருங்காலத்தில் சென்னையைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருந்தாக வேண்டும். அழிவின் விளிம்பில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க முதல்வா் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நீரியல் வல்லுநா் எஸ்.ஜனகராஜன், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் காா்முகில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments