தரமற்ற முறையில் கட்டப்படும் மேம்பாலத்தை இடித்த பொதுமக்கள்!
தரமற்ற முறையில் கட்டப்படும் தரைமட்ட மேம்பாலத்தை அப்பகுதி மக்கள் இடித்த சம்பவம் குறித்து...
வேலூர்: ஒடுகத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் மேம்பாலத்தை அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இடித்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பின்னத்துரை ஊராட்சி, பொம்மன்கொட்டாய் பகுதியில் இருந்து கொல்லைமேடு செல்லும் வழியில் கே.ஜி. ஏரியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் நீர்வரத்து கால்வாய் செல்கின்றது.
இந்த கால்வாயை கொல்லைமேடு பகுதிக்கு செல்லும் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லுவோர் என அனைவரும் கடந்து செல்கின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, தரைமட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன் அடிப்படையில், கால்வாயின் குறுக்கே புதிய தரைமட்ட மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த மேம்பால கட்டுமானப் பணிகள், மிகவும் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.
சிமெண்ட் கலவை சரியாக இல்லாததாலும், தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்துவதாலும் பாலம் திறப்பதற்கு முன்பே சேதமடையும் அபாயம் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்து, நேற்று திரண்ட அப்பகுதி பொதுமக்கள், பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலம், தற்போதே பலவீனமாகக் காட்சியளிக்கிறது.
இதனால், எதிர்காலத்தில் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலப் பணியை உடனடியாக நிறுத்தி, தற்போது கட்டப்பட்டுள்ள பகுதியை இடித்துவிட்டு, முற்றிலும் தரமான முறையில் புதிய மேம்பாலத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும், நீர்வரத்து கால்வாய் பகுதியில் கட்டப்படும் பாலம் என்பதால், மழைக்காலங்களில் நீரின் வேகத்தைத் தாங்கும் அளவிற்கு தரம் உயர்த்தி கட்டப்பட வேண்டும் எனக் கூறி இரும்பு கம்பி, கடப்பாரை போன்றவைகளை கொண்டு கட்டுமான பணிகளை இடித்தனர்.
தொடர்ந்து, இதுபோன்ற தரமற்ற முறையில் கட்டக் கூடாது, தரமான முறையில் கட்ட வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரமற்ற முறையில் கட்டப்படும் தரைமட்ட மேம்பாலத்தை அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இடித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
An incident in which local residents banded together to demolish a flyover being constructed with substandard materials near Odugathur has caused a stir.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.