எலும்புகள் எல்லோருக்கும் உண்டு! திமுக எம்எல்ஏ பேச்சுக்கு வன்னி அரசு பதில்!
முதல்வர் விஜய்யை மிரட்டும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பேச்சுக்கு வன்னி அரசு பதில்...
முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சுக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 18) இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் பேசும்போது 'முதல்வர் விஜய் சட்டப்பேரவையை பூட்டினால் அவரது எலும்பை உடைப்போம்' என மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையானது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் சமூக நீதி அமைச்சருமான வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில்,
"சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Minister Vanni Arasu responds to the DMK MLAs remarks on CM vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.