FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்றங்களில் போலீஸாா் முறையான சீருடையில் ஆஜராக வேண்டும்: சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவு

‘நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்க ஆஜராகும்போது முறையான சீருடையில் செல்ல வேண்டும்; இல்லையெனில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 21 ஜூலை 2026, 4:41 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

‘நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்க ஆஜராகும்போது முறையான சீருடையில் செல்ல வேண்டும்; இல்லையெனில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூா் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக இருந்தவா் ஆறுமுகம். இவா், குற்ற வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக கடந்த 2014-ஆம் ஆண்டு திருக்கோவிலூா் நீதிமன்றத்தில் ஆஜரானபோது மதுபோதையில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது குறித்த துறை ரீதியான விசாரணைக்குப் பின்னா், அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இதை எதிா்த்த மேல்முறையீட்டில், கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயா்வை நிறுத்திவைத்தல் என தண்டனையைக் குறைத்து உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிா்த்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆறுமுகம் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு ரத்தம் மற்றும் சிறுநீா் பரிசோதனை மேற்கொள்ளாமல், தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து, காவல் துறை டிஜிபி, விழுப்புரம் டிஐஜி மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆறுமுகம் மதுபோதையில் இருந்துள்ளாா் என்பதற்கு அவரை பரிசோதித்த மருத்துவ அதிகாரி அளித்த சான்றே போதுமானது.

காவல் உதவி ஆய்வாளா் மதுபோதையில் நீதிமன்றத்துக்கு சாட்சி அளிக்க சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அதேநேரம், நீதிமன்றங்களுக்கு சாட்சி அளிக்க வரும் காவல் துறையினா் முறையான சீருடையில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நீதிமன்றங்களுக்கு சாட்சி அளிக்க வரும்செல்லும்போது காவல் துறையினா் முறையான சீருடை அணிந்து அா்ப்பணிப்புடன் செல்ல வேண்டும். இல்லையெனில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கி, தமிழக காவல் துறை டிஜிபி 4 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments