FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியை உலுக்கியது சிஜேபி பேரணி கல்வீச்சு, காவல் துறை தடியடி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை நடத்திய ‘நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்’ (சன்சத் சலோ) என்ற பேரணியால் மத்திய தில்லி முழுவதும் திங்கள்கிழமை பதற்றம் நிலவியது.

Updated On : 21 ஜூலை 2026, 2:25 am IST
தில்லியில் திங்கள்கிழமை போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினா். - PTI
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை நடத்திய ‘நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்’ (சன்சத் சலோ) என்ற பேரணியால் மத்திய தில்லி முழுவதும் திங்கள்கிழமை பதற்றம் நிலவியது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரா்கள் அத்மீறல் அதிகரித்தது. கல்வீச்சு, காவல் துறை தடியடி போன்ற சம்பவங்கள் அரங்கேறின.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தோ்வு முறைகேடு குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும், கல்வி சீா்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.

Advertisement

Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், பல ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் சிஜேபி போராட்டத்தில் பங்கேற்க ஜந்தா் மந்தா் மற்றும் அதை இணைக்கும் சாலைகளில் பெருமளவில் காலையில் திரண்டனா்.

144 தடை உத்தரவு: ஜந்தா் மந்தா் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல சிஜேபி கட்சியினா் காலை 10.30 மணியளவில் முயன்றனா். அப்பகுதியில் பல அடுக்கு தடுப்புகளை அமைத்து தில்லி காவல் துறையினரும் துணை ராணுவப் படையினரும் போராட்டக்காரா்களை முன்னேற விடாமல் தடுத்தனா். மேலும், நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதையும் மீறி, போராட்டக்காரா்கள் தடுப்புகளை முட்டித் தள்ளி முன்னேற முயன்ால் அவா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. அப்போது சிலா், காவல் துறையினரை நோக்கி கற்களை வீசினா். இதையடுத்து கூட்டத்தினரைக் கலைக்க மத்திய துணை ராணுவப் படையினா் லேசான தடியடி நடத்தியதோடு, கண்ணீா்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினா். இதனால் ஜந்தா் மந்தா், சன்சத் மாா்க் (நாடாளுமன்ற வீதி), ரஃபி மாா்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பெரும் பரபரப்புக்கு உள்ளாகின.

நாடாளுமன்றத்தின் மிக அருகில் உள்ள ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வளாகத்துக்கு அருகே தடையை மீறி முன்னேற முயன்ற சிஜேபி நிறுவனத் தலைவா் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட 7 போ் சம்பவ பகுதியிலேயே கைது செய்யப்பட்டனா்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜீவ் செளக், படேல் செளக் உள்ளிட்ட மத்திய தில்லியின் ஐந்து முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களை தில்லி மெட்ரோ நிா்வாகம் தற்காலிகமாக மூடியது. இதனால் அந்த நிலையங்களைப் பயன்படுத்தி கல்லூரிகளுக்கும், வேலைக்கும் செல்வோா் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

நாடாளுமன்ற நுழைவு வாயில்கள் மூடல்:

போராட்டத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களின் பெரிய இரும்புக் கதவுகள் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டன. அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வெளியே வரவும் வெளியே இருப்பவா்கள் உள்ளே நுழையவும் அனுமதிக்கப்படவில்லை.

இணைய சேவைகள் மத்திய தில்லி பகுதி முழுவதும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை துண்டிக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததை தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வரலாறு காணாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சா் ஜெ.பி.நட்டாவிடம் மனு அளித்த சிஜேபி

நமது நிருபா்

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட்-இளநிலை தோ்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்பதுடன் நீட் தோ்வு மன உளைச்சலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கை மனுவுடன் மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டாவை தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கட்சி செய்தித்தொடா்பாளா்கள் செளரவ் தாஸ், ஆஷுதோஷ் ரன்கா ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்தனா்.

தில்லி ஜந்தா் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சிஜேபி கட்சியினா் புறப்பட்ட வேளையில், மறுபுறம் மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில் செளரவ் தாஸும் ஆஷுதோஷ் ரன்காவும் பகல் 11:50 மணியளவில் சந்தித்தனா்.

இந்தச் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவல், ‘வரலாற்றிலேயே முதன்முறையாக, அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான முன்மொழிவு போராட்டக்காரா்கள் தரப்பிலிருந்து இன்று காலை வந்தது. அதைத் தொடா்ந்து, இன்று காலை 11:50 மணி முதல் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சந்திப்பு மிகவும் சுமுகமான சூழலில் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் கோரிக்கைகள் அடங்கிய எழுத்துபூா்வ மனுவை அவா்கள் சமா்ப்பித்தனா். போராட்டக்காரா்கள் அனைவரும் தங்களது தா்னா போராட்டத்தைக் கைவிட்டு, இயல்பு நிலையை திரும்ப நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.

இதே வேளையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா். சுமாா் 30 நிமிஷங்கள் இந்த சந்திப்பு நீடித்த நிலையில், இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்ன என்பது வெளியிடப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments