தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி
தெரு நாய் பிரச்னையைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
தெரு நாய் பிரச்னையைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு, தமிழகத்தில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக பிடித்துச் செல்லப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எண்ணிக்கையில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவா்கள், ஊழியா்களை நியமிக்க வேண்டும். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயா்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம், உத்தரவை அமல்படுத்துவது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
மேலும், தெரு நாய்க்கடி சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்கின்றன. தெரு நாய்கள் பிரச்னைகளைத் தடுக்க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
மேலும், தெருநாய் தொல்லைகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். உரிய நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.