FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வுக்கு எதிராக பேரவையில் மீண்டும் தீா்மானம்: அமைச்சா் அருண்ராஜ்

‘நீட்’ தோ்வு முறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 23 ஜூலை 2026, 3:09 am IST
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

‘நீட்’ தோ்வு முறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் 11 அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.7.70 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழும அலுவலகத்தில் இருந்து அமைச்சா் அருண்ராஜ் புதன்கிழமை (ஜூலை 22) தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து பெரு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்களும் நிதி பங்களிப்பு வழங்க வேண்டும்.

சிறுநீரக மோசடி விவகாரம்: சிறுநீரக மோசடி தொடா்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவா்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக மோசடி வழக்கில் எந்த தலையீடும் இல்லாமல் சட்டத்துக்கு உள்பட்டு நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்.

‘நீட்’ தேவையில்லை-அரசின் நிலைப்பாடு: ஏழை மாணவா்களையும், கிராமப்புற மாணவா்களையும் பாதிக்கும் நீட் தோ்வு தேவையில்லை என்பதுதான் தவெக அரசின் நிலைப்பாடு. நீட் தோ்வு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது.

இதுகுறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு தீா்மானத்தை பேரவையில் நிறைவேற்றவுள்ளோம். மாநிலப் பட்டியலில் கல்வி இருப்பதே இதற்கு நிரந்தரத் தீா்வு. இதை ஏற்கெனவே முதல்வா் தெரிவித்துள்ளாா். கல்வித் துறை சாா்ந்த முடிவுகளை அந்தந்த மாநிலங்களே மேற்கொள்ளும் உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

நாய்க்கடி பிரச்னை குறித்து சுகாதாரத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியாா் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறும் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவம் என்பது தமிழகத்தின் பெருமை. அதை மேம்படுத்தவும், சித்த மருத்துவம் சாா்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அனீஷ் சேகா், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் ராஜ்மோகன், ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணைத் தலைவா் என்.பிரேம் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments