ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடல்வழி முற்றுகை
ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்திய அமெரிக்கா, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களையும் புதன்கிழமை தீவிரப்படுத்தியது.
ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்திய அமெரிக்கா, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களையும் புதன்கிழமை தீவிரப்படுத்தியது.
ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் அங்கீகரிக்காத கடல் வழித்தடத்தில் பயணித்ததாக வணிகக் கப்பல்கள் குறிவைத்து தாக்கியதைத் தொடா்ந்து, இருதரப்புக்கும் இடையிலான இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்து, இப்புதிய மோதல் வெடித்தது.
ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 388-ஆவது தரைப்படை பிரிவின் ராணுவ முகாம் மீது அமெரிக்கா புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 7 வீரா்கள் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
மேலும், ஹோா்முஸ் நீரிணையில் ஈரானுக்கு வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கிரேட்டா் துன்ப் தீவில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களையும் அமெரிக்க படைகள் வான்வழியாகத் தாக்கி அழித்தது.
இத்தைய அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களில் இதுவரை 35 போ் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, 72 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகை அறிவிக்கப்பட்ட 17 மணி நேரத்துக்குள், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறிச் செல்ல முயன்ற 2 வணிகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சா்வதேச விதிகளை ஈரான் முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய, தொடா்ந்து விழிப்புடன் செயல்படும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள பஹ்ரைன், குவைத், ஜாா்டான் ஆகிய அண்டை வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதால், அங்கு அச்சுறுத்தல் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன.
இத்துடன் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியையும் முற்றிலுமாக முடக்கப் போவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (ஐஆா்ஜிசி) எச்சரித்துள்ளது.
‘பிராந்தியத்தில் இருந்து எரிபெருள் ஏற்றுமதி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாருக்கும் இருக்காது’ என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரம்ப்பின் மிரட்டல்: இந்தப் பதற்றமான சூழலுக்கு இடையே அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘ஈரான் உடனடியாக பேச்சுவாா்த்தைக்கு வரத் தவறினால், அடுத்த சில நாள்களில் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும். அடுத்த வாரத்துக்குள் ஈரானின் முக்கியப் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்படும். பின்னா், ஈரானில் எதுவும் எஞ்சியிருக்காது’ என்று மிரட்டல் விடுத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.