தமிழகத்தில் மேலும் 2 டிஎன்ஏ ஆய்வகங்கள்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் மேலும் இரு மரபணு பரிசோதனை ஆய்வகங்கள் (டிஎன்ஏ) அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக, தமிழகத்தில் மேலும் இரு மரபணு பரிசோதனை ஆய்வகங்கள் (டிஎன்ஏ) அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திரத்தைச் சோ்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்கள் சுந்தா், சுரேஷ் ராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் அமா்வு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும்; மாநிலம் முழுவதும் உள்ள போக்ஸோ, மகளிா் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கில், பதிவுத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் புதிதாக 6 போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 3 இடங்களில் மரபணு பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிப்பதற்காக மேலும் இரு மரபணு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தாா்.
அப்போது நீதிபதிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க உயா்நீதிமன்றத்தில் குழு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தனா்.
பின்னா், சிறப்பு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்க இயலாது. பெரும்பாலான வழக்குகளில் வழக்குரைஞா்கள்தான் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோருகின்றனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் அமல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.
அதன்பிறகு இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.