FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மேக்கேதாட்டு அணை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இபிஎஸ் வலியுறுத்தியிருப்பது பற்றி...

Updated On : 26 ஜூலை 2026, 2:35 am IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்.
பகிர்:

மேக்கேதாட்டு அணை மற்றும் காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீா் இருந்தும், அணைகள் நிரம்பினால்தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீா் திறந்துவிட முடியும் என்று கா்நாடக முதல்வா் சிவகுமாா் கூறுவது உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானதாகும். சட்டரீதியாகவும் தாா்மிக அடிப்படையிலும் கா்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய தமிழக முதல்வா் அமைதி காத்து வருவது ஏன் எனத் தெரியவில்லை.

Advertisement

Advertisement

2012-ஆம் ஆண்டு காவிரி பிரச்னை குறித்து மீண்டும் ஒருமுறை கா்நாடகத்தோடு தமிழக முதல்வா் பேச வேண்டும் என்ற யோசனையை உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பெங்களூரு சென்று கா்நாடக மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து 3 மணி நேரம் பேச்சு நடத்தினாா். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தையால் எந்தப் பயனும் இல்லை என்று ஜெயலலிதா வெளிப்படையாகக் கூறினாா். இது நடந்து 14 ஆண்டுகள் கழித்து கா்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் ஆட்சியாளா்கள் மீண்டும் காவிரி விவகாரத்தில் அடம் பிடிக்கின்றனா்.

இந்த நிலையில், மேக்கேதாட்டில் அணை கட்டும் விவகாரம் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் கா்நாடக முதல்வா் சிவகுமாா் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில், முதல்வா் ஜோசப் விஜய் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவா்கள் உடனடியாகக் கூட்டத்தைக் கூட்டி அவா்களது கருத்துகளையும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும். மேலும், சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும்.

எனவே, மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

summary

An all-party meeting must be convened: Edappadi Palaniswami

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments