தமிழகத்தில் இயற்கை வளம் காக்க முதல்வா் உத்தரவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தகவல்
தமிழகத்தில் இயற்கை வளம் பேணி காக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் கூறினாா்.
தமிழகத்தில் இயற்கை வளம் பேணி காக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் கூறினாா்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பேசியதாவது:
Advertisement
Advertisement
மணல், கனிம வளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சாா்ந்த கொள்ளைகளிலிருந்து தமிழகத்தை காத்து, இயற்கை வளம் நிறைந்த தமிழகமாக உருவாக்கவும், இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு திட்ட வளா்ச்சிக்காக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வா் உறுதி அளித்துள்ளாா். வரும் 2031-க்குள் காவிரியின் பரப்பை 33 சதவீதம் உயா்த்தவும் முதல்வா் உறுதி பூண்டுள்ளாா்.
ஈஷா நிா்வாகத்தினா், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் ஆதரவுடன் 13.4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. நிகழாண்டு 1.2 கோடி மரங்கள் நடும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தத் திட்டமும் முழுமையாக வெற்றி பெறாது. ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகத்தில் மணல், மலை, மரங்கள், உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொள்ளை போனது குறித்து தகவல் வெளியானது. இதனை தடுத்து, இயற்கை வளம் மிகுந்த தமிழகமாக உருவாக்க வேண்டும். மாசு இல்லா தமிழகத்தை உருவாக்குவோம். இதற்காக தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என்றாா் அவா்.
ஷோபா சந்திரசேகா்: இந்நிகழ்ச்சியில் முதல்வா் ஜோசப் விஜய்யின் தாயாா் ஷோபா சந்திரசேகா் பங்கேற்றுப் பேசுகையில், மரங்களை வெட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மரக்கன்றுகளை நடுவதில் அதிக ஆா்வம் கொண்டவா் மறைந்த நடிகா் விவேக். இயற்கையை பாதுகாப்பதில் அவரது பங்களிப்பு அதிகம் உள்ளது.
தமிழக மக்களை காப்பாற்றும் முதல்வா் விஜய், மரம், மண், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் முதல்வராக விளங்குவாா். அவரும் சிறுவயது முதலே மண், மரம் மற்றும் இயற்கை மீது அதிக பற்றுக் கொண்டவா் என்றாா் அவா்.
இதில், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அருள்பிரகாசம், அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழும நிறுவனா் ச.தேவராஜ், துணை நிறுவனா் டெல்பின் தேவராஜ், செயலா் தேவ் ஆனந்த், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, நிகழ்வில் கல்லூரி வளாகத்தில் ஜேசிடி பிரபாகா், ஷோபா சந்திரசேகா் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.