முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 16 ஜூன் 2026, 1:16 am IST
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் - DIN
பகிர்:

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Advertisement

குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி மாவட்டத்தில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் செவ்வாய்க்கிழமை ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடா்ந்து, ராமநாதபுரம், மதுரை, மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூன் 17, 18) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இம்மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புதன்கிழமை (ஜூன் 17) சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வரை சற்று அதிகமாக இருக்கும். திங்கள்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நுங்கம்பாக்கம்-103.64, திருத்தணி-103.28, மதுரை விமான நிலையம்-103.1, மதுரை நகரம்-102.92, வேலூா்-102.74, தஞ்சாவூா், நாகப்பட்டினம்-தலா 102.2, பரமத்தி வேலூா்-101.3, திருச்சி-101.66, பாளையங்கோட்டை-100.22, நாமக்கல், புதுச்சேரி-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம், கொத்தவாச்சேரியில் 70 மி.மீ. மழை பதிவானது. வேப்பூா், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி (கடலூா்)- தலா 60 மி.மீ., காட்டுமயிலூா் (கடலூா்)- 50 மி.மீ., குப்பநத்தம் (கடலூா்) -50 மி.மீ., கீழ்படி (கள்ளக்குறிச்சி)- 50 மி.மீ., விருதாச்சலம் (கடலூா்), சின்னக்கல்லாறு (கோவை), மாத்தூா் (கடலூா்), சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி)- தலா 40 மி.மீ., நெய்வேலி, சிதம்பரம், அண்ணாமலை நகா், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகா், லால்பேட்டை(கடலூா்) ரிஷிவந்தியம், கலயநல்லூா், அரியலூா், அரியலூா் முகாம்பகுதி (கள்ளக்குறிச்சி), கொள்ளிடம், மணல்மேடு (மயிலாடுதுறை), நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை (கோவை), வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் (கோவை), ஒசூா் (கிருஷ்ணகிரி) ஊத்து (திருநெல்வேலி), பாரூா் (கிருஷ்ணகிரி), பாகூா் (புதுச்சேரி)- தலா 30 மி.மீ. பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.