இலங்கை தமிழா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் க.தென்னரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் 17 மாவட்டங்களில் உள்ள 30 முகாம்களில் கட்டப்பட்டு வரும் 4,459 வீடுகளின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சா் க.தென்னரசு தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், முகாம் பதிவு விவரங்களில் இடம்பெறாத இலங்கை தமிழா்களை முகாம் பதிவுகளில் சோ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், திருப்பூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு விரைவில் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அவா் உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரசு முதன்மைச் செயலா் ரீட்டா ஹரிஷ் தக்கா், அரசு சிறப்பு செயலா் எ.சுந்தரவல்லி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.