நெல்லைக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்!
நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள் ராணுவ ஹெலிகாப்டரில் புதன்கிழமை நெல்லைக்கு வந்தது குறித்து...
திருநெல்வேலி: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து, நாடு முழுவதும் இம் மாதம் 21 ஆம் தேதி நீட் மறுதோ்வு நடைபெற உள்ள நிலையில், நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள் ராணுவ ஹெலிகாப்டரில் புதன்கிழமை நெல்லைக்கு வந்தன.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த தேர்வை முழுமையாக ரத்துச் செய்வதாக மத்திய கல்வி அமைச்சகமும், தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும் அறிவித்திருந்தது.
மேலும், நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21- ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும் எனவும், நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் நாடு முழுவதும் உள்ள தோ்வு மையங்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் என்டிஏ தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தேர்வு மையங்களை தயார் செய்யும் முன்னேற்பாடு பணிகளும், முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கூடிய தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்ட தோ்வு மையங்களுக்கு சென்னையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் வினாத்தாள்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள இறங்குதளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை செவ்வாய்க்கிழமை தரையிறக்கி ஒத்திகை நடைபெற்றது. தீயணைப்பு வாகனங்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
மாநகரில் வட்டமடித்த ஹெலிகாப்டர்
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை(ஜூன் 17) நெல்லை மாநகரப் பகுதியான கே.டி.சி. நகர், அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஐகிரவுண்டு பழைய ஆஸ்பத்திரி மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக வட்டமடித்தது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பத்திரமாகத் தரை இறங்கியது.
பாதுகாப்பாக இறக்கப்பட்ட வினாத்தாள்கள்
முதலாவதாக தரையிறங்கிய அந்த ஹெலிகாப்டரில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்போடு 20 வினாத்தாள் பண்டல்கள் கொண்டு வரப்பட்டன. ஹெலிகாப்டரிலிருந்து வினாத்தாள்கள் பாதுகாப்பாக காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டன.
அதன் பிறகு, மேலும் 20 வினாத்தாள் பண்டல்களைக் கொண்டு வருவதற்காக அந்த ஹெலிகாப்டர் மீண்டும் மதுரையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இவ்வாறு மொத்தம் இரண்டு முறை ஹெலிகாப்டர் மூலமாக வினாத்தாள் பண்டல்கள் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த வினாத்தாள் பண்டல்கள் அனைத்தும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு பாளையங்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஒரு தனி அறையில் வினாத்தாள்கள் பத்திரமாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கனரா வங்கி குடோனிலும் வினாத்தாள்களை வைப்பதற்கான பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்பாளர்கள்
நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட பலரும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், மறு தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் பாதுகாப்பான, யாருக்கும் தெரிவிக்கப்படாத ஓரிடத்தில் வினாத்தாள் தயாரிப்பாளர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஜூன் 21, நீட் மறுதேர்வு முடிவடையும் வரை அவர்கள் அங்கேயே தங்கி இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்போன், உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். இணையதள சேவையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. உலகிலிருந்து இவர்களுக்கு தொடர்பில்லாத வகையில் வைக்கப்பட்டுள்ளனர்.
22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இத்தனை காலமும் வினாத்தாள் தயாரிப்பாளர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, தேர்வெழுத வரும் மாணவர்களின் தலைமுடியை பரிசோதித்துக் கொண்டிருந்த தேர்வு முறை பற்றியும் கேள்வி எழுகிறது.
இப்போது நீட் தேர்வு வினாத்தாள் தயாரிப்பவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்வுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.