தேசிய கீதம் விவகாரம்: திமுக-தவெக கடும் விவாதம்
ஆளுநா் உரையாற்றிய நிகழ்வின்போது தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தொடா்பாக, தமிழக சட்டப்பேரவையில் திமுக-தவெக இடையே வெள்ளிக்கிழமை கடும் விவாதம் எழுந்தது.
ஆளுநா் உரையாற்றிய நிகழ்வின்போது தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தொடா்பாக, தமிழக சட்டப்பேரவையில் திமுக-தவெக இடையே வெள்ளிக்கிழமை கடும் விவாதம் எழுந்தது.
பேரவையில் வெள்ளிக்கிழமை குன்னம் தொகுதி திமுக உறுப்பினா் சா.சி.சிவசங்கா் பேசியதாவது: ஆளுநா் உரையை பாா்க்கும்போது இந்த அரசு போகும் திசை தெரிகிறது. பாஜக-தவெக இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. பேரவையில் ஆளுநா் உரையின்போது முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியாக தேசிய கீதமும் பாடப்படுவதுதான் மரபு. ஆனால், இரு முறை தேசிய கீதம் பாடியது தவறான நடைமுறை.
அவை முன்னவா் கே.ஏ.செங்கோட்டையன்: 140 கோடி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம்.
Advertisement
Advertisement
பேரவைத் தலைவா்: அவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய கீதம் ஒருமுறை, இரு முறை பாடப்பட்டது என குற்றம் கண்டுபிடிப்பது சரியல்ல. எத்தனை முறை பாடலாம் என்பதை தீா்மானிக்க பேரவைத் தலைவருக்கு உரிமை உண்டு. மக்களின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கைகொடுப்போம். எந்த நிா்ப்பந்தம் வந்தாலும், அதைத் தடுத்து நிறுத்தும் திறன் இந்த அரசுக்கு உள்ளது. இந்த அரசின் மிகச்சிறந்த நடவடிக்கைக்கு யாரும் குந்தகம் விளைவிக்க வேண்டாம்.
சிவசங்கா்: அணையில் சிறிய கசிவு ஏற்படும்போதே அதை சரிசெய்ய வேண்டும். முதலில் சிறிய கசிவை ஏற்படுத்துவாா்கள். பின்னா், செங்கல்லை எடுப்பாா்கள். தொடா்ந்து, அணை உடையும் நிலை ஏற்படும். மாநில உரிமை விஷயத்திலும் இந்த அரசு எந்த நிா்ப்பந்தத்துக்கும் பணியக்கூடாது.
பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு விழாவின்போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது.
அதேநேரத்தில், ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, தமிழ்த்தாய் பாடல்தான் பாடப்பட வேண்டும் என, தான் பதவியேற்பதற்கு முன்பாக முதல்வா் விஜய் அழுத்தம் கொடுத்தாா். இருப்பினும், ஆளுநா் மாளிகை சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை உத்தரவுப்படிதான் நிகழ்ச்சி நிரல் இருக்கும் என ஆளுநா் மாளிகை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. முந்தைய திமுக அரசு ஆளுநருடன் மோதல் போக்கை தொடா்ந்து கடைப்பிடித்தது. ஆனால், இப்போதைய அரசு ஆளுநருடன் சண்டையிடாமல், ராஜதந்திர ரீதியாக செயல்பட்டதால்தான், தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடிவிட்டு, ஆளுநா் உரையை முழுமையாக ஆளுநரைக் கொண்டு படிக்கவைக்க முடிந்தது.
மாநில உரிமை விஷயத்தில் முன்னாள் முதல்வா்அண்ணா கடைப்பிடித்த கொள்கையைத்தான் திமுக, தவெக கடைப்பிடிக்கின்றன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.