அமோனியா கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை!
அமோனியாவை சுவாசித்ததால், தொழிலாளர்கள் பலருக்கு நுரையீரல், கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவப் பரிசோதனை...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இன்று (ஜூன் 21) அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் பணிபுரிந்த 145 தொழிலாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அமோனியா வாயு கசிந்து விபத்து நேர்ந்தபோது ஆலையில் பணியில் இருந்தவர்களுக்கும், பணி (ஷிப்ட்) முடிந்து ஓய்வில் இருந்தவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது.
அமோனியாவை சுவாசித்ததால், தொழிலாளர்கள் பலருக்கு நுரையீரல் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதையும் உறுதி செய்தனர்.
வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து 24 மணிநேரத்திற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
ammonia leaks in Tiruvallur shrimp factory All 145 factory workers undergo medical check-ups
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.