திமுக ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடி முதலீடு வெளியேறியதா? தவெக கூறுவது பொய்: டிஆர்பி ராஜா
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு பதில் அளிக்கும் வகையில் டி.ஆர்பி. ராஜா பதிவு...
தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என தொழில் துறை முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று (ஜூன் 23) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டு அதன்பிறகு இது பற்றி பேசலாம்.
Advertisement
Advertisement
தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்ற உண்மையை உணரக்கூடத் திறனின்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத பச்சைப் பொய்.
தொழில் முதலீடுகள் குறித்த இன்றைய ஆட்சியாளர்களின் அறியாமையை அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. இதில் செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை.
மத்திய அரசால் திட்டமிட்டு தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமான குற்றச்சாட்டாக வைத்தார்,
தில்லியுடன் தொடர்ந்து போராடினார். இதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், திமுகவையே குற்றம் சாட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு த.வெ.க அரசு சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது.
டொயோட்டா வாகனத் துறை நிறுவனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் தங்களது முதலீட்டை செய்துள்ளனர் ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது. என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்கமுடியும். இவை எதைப் பற்றியும் புரிந்துகொள்ளக் கூடிய திறனற்ற த.வெ.க. அரசு, முந்தைய அரசு கொண்டு வந்த முதலீடுகளுக்கு மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது என டி.ஆர்.பி. ராஜா பதிவிட்டுள்ளார்.
Did investments worth 3 lakh crore leave during the DMK regime TVK's claim is false: TRB Rajaa
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.