முகப்பு
தமிழ்நாடு

தவெக சாா்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்! தொல்.திருமாவளவனுக்கு அழைப்பு!

தவெக சாா்பில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 4:28 am IST
பகிர்:

தவெக சாா்பில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக , ஐயூஎம்எல் ஆதரவோடு ஆட்சியமைத்தது. தவெக தலைவா் சி.ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்றாா்.

தொடக்கத்தில் இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (ஐயூஎம்எல்), விசிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் தொடா்வதாகவும், குடியரசுத் தலைவா் ஆட்சி அமைவதைத் தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தன.

Advertisement

Advertisement

பின்னா், ஐயூஎம்எல் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைவதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் அண்மையில் அறிவித்தாா். அதேபோல், மதிமுகவும் திமுக கூட்டணியிலிருந்து விலகியதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ சனிக்கிழமை அறிவித்தாா்.

இந்த சூழலில், தவெக சாா்பில் முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மீனம்பாக்கத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தவெக கூட்டணியில் இணைந்த கட்சிகள் மற்றும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவா்கள் கலந்துகொள்ளவுள்ளனா். இதற்காக தவெக சாா்பில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் சென்னை மீனம்பாக்கத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவனை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனா்.

தொடா்ந்து, அடுத்தடுத்த கட்சிகளின் தலைவா்களுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், தவெக கூட்டணி குறித்தும், அதற்கான பெயா் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments