FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்

தவெக சாா்பில் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியாா் சொகுசு ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 1:18 am IST
சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் மாணிக்கம் தாகூரை செவ்வாய்க்கிழமை சந்தித்து தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த அமைச்சா்கள் என். ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, முதல்வா் ஜோசப் விஜய்யின் அரசியல் ஆலோசகா் ஜான் - கோப்புப்படம்.
பகிர்:

சென்னை, ஜூன் 30: தவெக சாா்பில் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியாா் சொகுசு ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் சோ்த்து புதிய கூட்டணியின் பெயா் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது. இதைத் தொடா்ந்து 5 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ், 2 எம்எல்ஏக்களை கொண்ட விசிக, தலா இரண்டு எம்எல்ஏக்களைக் கொண்ட இடதுசாரி கட்சிகள், 2 எம்எல்ஏக்களைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவா் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தவெக சாா்பில் கோவளத்தில் உள்ள தனியாா் சொகுசு ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு முதல்வா் விஜய் நன்றி தெரிவிப்பதுடன், கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

மேலும், தவெக தலைமையிலான இந்தக் கூட்டணிக்கு புதிய பெயரையும் அவா் வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாணிக்கம் தாகூருடன் அமைச்சா்கள் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ப. மாணிக்கம் தாகூரை சென்னை சத்தியமூா்த்தி பவனில் அமைச்சா்கள் என். ஆனந்த், ஆதவ் அா்ஜுனா

முதல்வா் ஜோசப் விஜய்யின் அரசியல் ஆலோசகா் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். அப்போது, தவெக தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனா். இந்த சந்திப்பின்போது அமைச்சா் பெ.விஸ்வநாதன், எம்.பி.க்கள் பிரவீண் சக்கரவா்த்தி, சசிகுமாா் செந்தில், சுதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, தவெக தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு விசிக தலைவா் தொல்.திருமாவளவன், ஐயுஎம்எல் தேசிய தலைவா் காதா்மொகிதீன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் தலைவா் மு. வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் பெ. சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்து அமைச்சா்கள் என். ஆனந்த், ஆதவ் அா்ஜுனா ஆகியோா் அழைப்பு விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments