பல்கலை.யில் போராட்டத்தை அனுமதிக்கலாம், வன்முறையை அல்ல! ஜே.என்.யு. துணை வேந்தர்
கல்விச் சிந்தனை அரங்கில் ஜே.என்.யு. துணை வேந்தர் பேசியது பற்றி...
பல்கலைக்கழகத்தில் போராட்டத்தை அனுமதிக்கலாம், ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சுனைனா சிங் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் பேசியதாவது:
Advertisement
Advertisement
“பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியமே அதற்கு இணையாக தரமும் முக்கியம். மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய யோசிக்க வேண்டும். அரசின் நிதிக்காக காத்திருக்காமல் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யலாம்.
பல்கலைக்கழங்களில் போராட்டங்களை அனுமதிக்கலாம், ஆனால், வன்முறையையும், பொதுச் சொத்தை சேதப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது. அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களும் மக்களின் வரிப் பணத்தில் இயங்குகின்றன. ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 10 முதல் 12 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்க நினைக்கிறோம். சட்டத்தை கையில் எடுப்பவர்களை அல்ல. 10 சதவீதம் மாணவர்கள் மட்டுமே இடையூறு செய்பவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மாணவர்கள் நடுத்தர வர்க்கத்தில் இருந்து படித்து பணிக்கு செல்லும் கனவுடன் வருகிறார்கள்.
இந்திய அரசும் உயர்க்கல்வித்துறையும் பொதுப் பல்கலைக்கழகங்களும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் அரசியல் மாணவர்களின் அரசியலாகவே நீடிக்கிறது கிடையாது, அது வெகுஜன அரசியலாக மாறுகின்றது. அதற்கு வளாகத்தில் இடம் கிடையாது. ஒழுக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது அவசியம்.” எனத் தெரிவித்தார்.
சுனைனா சிங் பேசுகையில், ”இந்தியாவில் ஜென் ஸி, ஆல்பா தலைமுறையினர் என 65% இளைஞர்கள் இருக்கிறார்கள். அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்குவதே நமது நாட்டின் இலக்கு. பல்கலைக்கழங்கள் அதிகரித்து வருகின்றது, ஆனால், எவ்வளவு தரத்தில் நாம் கற்றுக் கொடுக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்” என்றார்.
Protests are allowed in universities, but not violence! JNU Vice Chancellor
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.