முகப்பு
தமிழ்நாடு

தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் எந்தவித பிரச்னையும் இல்லை: சச்சின் பைலட்

கல்விச் சிந்தனை அரங்கில் சச்சின் பைலட் பேசியது குறித்து...

Updated On : 3 மார்ச் 2026, 12:03 pm IST
கல்விச் சிந்தனை அரங்கில் சச்சின் பைலட்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிய தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் எந்தவித பிரச்னையும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினருமான சச்சின் பைலட் கலந்துகொண்டார்.

இதில், கல்விக்கு அப்பால் : களத்தில் இருந்து என்ற தலைப்பில் சச்சின் பைலட் பேசியதாவது:

Advertisement

Advertisement

''நாட்டின் பாதுகாப்பு சவாலானதாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை போன்றவை நாட்டின் மிக முக்கிய பிரச்னையாக உள்ளன. அதில் மத்திய அரசு கவனம் செலுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இதில் என்ன தவறு இருக்கிறது?

மாற்றுக் கருத்துகளை பாஜக சகித்துக்கொள்வதில்லை. ஜனநாயக நாட்டில் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எடுத்துக்காட்டு, தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் நடந்த போராட்டத்தைக் கூறலாம்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதிக கல்வித் திறன் கொண்ட மாணவர்கள் கூட தகுதியுடைய வேலை கிடைக்காததால், கிடைத்த வேலைகளைச் செய்யும் நிலையில் உள்ளனர்.

ஒரு சதவிகித இந்தியர்கள் 40 சதவிகித இந்தியர்களின் சொத்துக்களை கொண்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இளைஞர்களின் நிலை வேறு, இப்போது உள்ள இளைஞர்களின் நிலை வேறு. உலகத்தின் நடப்புகள் அனைத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களால் அறிந்துகொள்ள முடிகிறது.

காங்கிரஸ் மிகவும் பழமையான கட்சி. ஆனால், இளம் தலைமுறையினரை மேம்படுத்துவதிலும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது.

சுதந்திர நாட்டில் வெவ்வேறு கருத்துகளை அனுமதிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வலுவான இந்தியாவுக்கு மாற்றுக்கருத்துகள் அவசியமானது.

நீங்கள் முடக்கப்பட்டாலும் சரியானது எதுவோ அதற்கு குரல் கொடுப்பதே உண்மையான தலைமை. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது, மாற்றுக் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைவது போன்றவற்றை மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளனர். தேர்தலில் அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்.

அஸ்ஸாம் முதல்வரின் அரசியல் என்ன? அவருக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.

காங்கிரஸ் முஸ்லீம் கட்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இது இந்தியாவை பிளவுபடுத்துவது இல்லையா? நாட்டில் பிறந்த அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது. மதம், சாதி, நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு சரியானதல்ல.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. கட்டாயம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். கேரளத்திலும் பெரும்பான்மை உள்ளது. தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடுகள் நேர்மறையாகவே நடந்து வருகின்றன. மாறுக்கருத்துகள் சிலருக்கு இருந்தாலும், இந்தக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என பெரும்பாலானோர் விரும்புகின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் திமுகவின் நீண்டகால அங்கமாக காங்கிரஸ் உள்ளது. மக்களும் இதனை அங்கீகரித்துள்ளனர்.

விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஈடுபட்டுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Sachin Pilot Rajasthan MLA in Think Edu 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments