வசனம் பேசிய ரஜினி, பாடிக் காட்டிய யேசுதாஸ்! மேற்கு வங்க ஆளுநர் ருசிகரத் தகவல்!
கல்விச் சிந்தனை அரங்கில் மேற்கு வங்க ஆளுநர் பேசியது பற்றி...
அனுமதிச் சீட்டு இல்லாமல் வந்த ரஜினிகாந்த் வசனம் பேசியதாகவும், யேசுதாஸ் பாடிக் காட்டியதாகவும் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்தபோஸ் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்தபோஸ் கலந்துகொண்டார்.
இதில், கேரள மாநிலத்தில் அவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
”கேரள கலாசாரத் துறை செயலாளராக நான் பணிபுரிந்தபோது, மிகப் பெரிய அளவிலான கலாசார நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். இந்த நிகழ்வுக்கு அனுமதிச் சீட்டு வழங்கி, அவர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்தோம். இதற்காக காவல்துறை ஆணையர் அனுமதிச் சீட்டை வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் இருந்து திரைத் துறையினரை அழைத்திருந்தோம். நிகழ்வு அரங்கிற்கு முதலில் நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அவர் அனுமதிச் சீட்டை எடுத்துவர மறந்ததால் அவரை காவலர்கள் அனுமதிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் அவர் ரஜினி என்று கூறியபோதும், அனுமதிச் சீட்டு கொடுங்கள் இல்லையென்றால் நீங்கள்தான் ரஜினி என நிரூபியுங்கள் என்று தெரிவித்துவிட்டார். உடனே, ரஜினி பிரபல வசனத்தை கூறிய பிறகு அவரை அனுமதித்தார்.
பின்னர், கே.ஜே. யேசுதாஸ் வருகைதந்தார். அவரும் அனுமதிச் சீட்டை எடுத்துவரவில்லை. காவலரிடம் பிரபல பாடல் ஒன்றை பாடிக் காட்டிய பின்னர், அவர் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரியாது.
இந்த நிலையில், நான் வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வர முயன்றேன். என்னிடமும் அனுமதிச் சீட்டை அந்த காவலர் கேட்டார். நான்தான் கலாசாரத்துறை செயலாளர் என்று கோபத்துடன் கூறினேன். உடனே, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அனுமதிச் சீட்டு இல்லாத ரஜினி, யேசுதாஸ்கூட அவர்கள் யார் என நிரூபித்த பிறகே உள்ளே அனுப்பினேன் என்றார்.
நான் அவரிடம் ரஜினி, யேசுதாஸ் எல்லாம் யார் என்று கேட்டேன். அந்த காவலர் உங்களுக்கு அவர்கள் யார் என்று தெரியாதா என்று கேட்டார். அவர்களை பற்றி நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என கேட்டவுடன், நீங்கள்தான் கலாசாரத்துறை செயலாளர் என்று நிரூபித்துவிட்டீர்கள், உள்ளே செல்லுங்கள் என அனுமதித்தார்” எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியதாவது:
“உலகில் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார். வாழும் வரை கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி கசப்பானது. ஆனால், அதன் பலன் இனிமையானது.
தற்சார்பு இந்தியா என்ற முன்னெடுப்புடன் வரும் 2047 -இல் வளர்ச்சியடைந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கல்வியின் மூலமாகவே சாத்தியமாகும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, சமூக அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது” என்றார்.
West Bengal Governor CV Ananda Bose at the Thinkedu Conclave 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.