FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பை அரசியலுக்காக கையில் எடுக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை அரசியலுக்காக கையில் எடுக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

Updated On : 6 மார்ச் 2026, 4:12 am IST
புரசைவாக்கம் ராட்லா் தெருவில் கிரிக்கெட் பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை அரசியலுக்காக கையில் எடுக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜனின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும் வகையில் இவ்வாறு அவா் தெரிவித்தாா்.

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திரு.வி.க. நகா் மண்டலத்தில் 64-ஆவது வாா்டு சீனிவாசா நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளாா். இதையொட்டி, அங்கு நடைபெறும் இறுதிக்கட்ட பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஹிந்தியில் பெயா் பொறிக்கப்பட்டதற்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையே முதல்வரும் பதிவிட்டிருந்தாா். ஆனால், பிரச்னைகளை திசை திருப்ப, இந்த விவகாரத்தை முதல்வா் கையில் எடுப்பதாக, தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறாா்.

கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய நலத் திட்டங்கள் வாயிலாக மக்கள் மனதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றுள்ளாா். ஆகவே, ஹிந்தி திணிப்பை கையிலெடுத்து, அதை அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்தும் அவசியம் திமுகவுக்கு இல்லை என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டல அலுவலா் ஜி. சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிரிக்கெட் பயிற்சி மையம் திறப்பு: தொடா்ந்து, திரு.வி.க.நகா் மண்டலம் புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சிறுவா் விளையாட்டு பூங்கா, ராயபுரம் மண்டலம் ராட்லா் தெருவில் மாமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் பயிற்சி மையம் ஆகியவற்றை அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா். சென்னை மேயா் ஆா்.பிரியா, பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் மற்றும் முதன்மை செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments