நாமக்கல் அரசு விடுதி மாணவியருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
நாமக்கல் அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவியருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது பற்றி...
நாமக்கல்: நாமக்கல்லில் பழங்குடியின நல மாணவியர் விடுதியில் தங்கிப் பயின்ற 30 மாணவிகள், மதிய உணவு சாப்பிட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்- மோகனூர் சாலையில் பழங்குடியினர் நல மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 103 மாணவிகள் தங்கியிருந்து அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அந்த மாணவிகள் விடுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 56 பேர் தங்கி உள்ளனர். திங்கள்கிழமை மதியம் ஒரு மணி அளவில், அவர்கள் மதிய உணவு சாப்பிட்டனர். இந்த மாணவிகள் பள்ளிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
Advertisement
Advertisement
உடனடியாக மாணவிகள் அனைவரும் மீட்கப்பட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மாணவிகள் 22 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவிகள் அனைவரும் கொல்லிமலை பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவிகளாவர்.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.