2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!
தேர்தலுக்கு முன்பு விடுத்த வாக்குறுதிக்கும் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக டிடிவி தினகரன் கருத்து...
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
Advertisement
Advertisement
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்'' என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், ச. ஜோசப் விஜய் இன்று முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்றதுமே மக்கள் முன்பு மூன்று திட்டங்களில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.
இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட மூன்று திட்டங்களில் கையெழுத்திட்டார்.
TTV Dhinakaran observes a contradiction between the promise made prior to the election and the announcement regarding 200 units of free electricity.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.