FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படவுள்ள கேக்குகள் தரமானதா? டிடிவி தினகரன் கேள்வி

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக்குகளின் தரம் குறித்து டிடிவி தினகரன் கேள்வி

டிடிவி தினகரன் - ENS
பகிர்:

குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாளை வழங்கப்பட உள்ள கேக்குகளின் தரம் குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் நவ. 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க 62.46 லட்சம் கேக் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்துள்ளது தமிழக அரசு.

Advertisement

Advertisement

நாளை சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெறும் விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு கேக் வழங்கவிருக்கிறார்.

இந்நிலையில் இந்த கேக்குகளின் தரம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்க வேண்டிய கேக்குகள் (Cakes) கேட்பாரின்றி வாகனங்களிலேயே கிடப்பதாகப் புகார் – குழந்தைகளின் உடல்நலம் சார்ந்த இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், கேக்குகளை உரிய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்!

குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காகப் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகள், வெகுதொலைவிலிருந்து கொண்டுவரப்பட்டு, கடந்த நான்கு நாள்களாக வாகனங்களிலேயே முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து அவ்வப்போது பல்வேறு புகார்கள் எழுந்துவரும் நிலையில், குழந்தைகள் தினத்தன்று வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகளும் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், கேக்குகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையிலும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகள் பல நாள்களாகச் சாலை மார்க்கமாகக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும், அவற்றின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி, சேமித்து வைக்கப்பட்ட விதம் மற்றும் தரம் ஆகியவற்றை முறையாகப் பரிசோதிப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் தரமற்ற அல்லது கெட்டுப்போன கேக்குகள் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, நாளை (நவ. 13) தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள கேக்குகளை, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மூலம் உரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் குழந்தைகளின் உடல்நலத்துடன் தொடர்புடைய இவ்விவகாரத்தில் அலட்சியம் கொள்ளாமல் தரமான மற்றும் பாதுகாப்பான கேக்குகள் மட்டுமே மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுவதைப் பள்ளிக்கல்வித்துறையும் தவெக அரசும் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Are the cakes to be distributed to students in schools of good quality, TTV Dhinakaran asks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.