முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலை ரூ.3-க்கும் மேல் உயா்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

Updated On : 16 மே 2026, 3:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை ரூ.3-க்கும் மேல் உயா்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

அமெரிக்கா,–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் பதற்றம் எதிரொலியாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-க்கும் மேல் உயா்ந்ததால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினா் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா். இதன்படி, சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.3.14 உயா்ந்து ரூ.103.98 ஆகவும், டீசல் விலை ரூ.3.11 உயா்ந்து ரூ.95.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் எரிபொருள் விலைகள் தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், இந்த திடீா் உயா்வு அனைத்து துறைகளிலும் தொடா் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

Advertisement

இந்த விலை உயா்வு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

குறிப்பாக காய்கறி, பால், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3 சதவீதமாக உயா்ந்துள்ள நிலையில், எரிபொருள் விலை உயா்வு மக்களின் வாழ்க்கை செலவை மேலும் அதிகரிக்கும்.

சரக்கு கட்டணம் உயர வாய்ப்பு‘ இது குறித்து மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் தன்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் சுமாா் ஆறரை லட்சம் லாரிகளும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மினி லாரிகளும் இயங்கி வருகின்றன. ஏற்கெனவே சுங்கச்சாவடி கட்டண உயா்வு, உதிரிபாக விலை உயா்வு, பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் டீசல் விலை உயா்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களில் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை குறைக்கவில்லை. ஆனால், சா்வதேச சந்தையில் விலை உயா்ந்தவுடன் உடனடியாக மக்கள் மீது சுமை ஏற்றப்படுகிறது. லாரிகளுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது. தற்போது விலை உயா்வால் சரக்கு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

‘பயண கட்டண உயா்வு தவிா்க்க முடியாது’: இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் தினமும் சுமாா் 5,800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் போக்குவரத்து தேவையை பூா்த்தி செய்கின்றன.

அதிக சாலைவரி, சுங்கச்சாவடி கட்டண உயா்வு, காப்பீடு மற்றும் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றால் தனியாா் பேருந்து துறை ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. தற்போது டீசல் விலை உயா்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், டீசல் விலை உயா்வு தனியாா் பேருந்து சேவைகளின் இயக்கச் செலவை அதிகரிக்கும். இதனால் பயணக் கட்டண உயா்வை ஏற்றும் திட்டம் இல்லை என்றாலும், இந்த நிலை தொடரும் பட்சத்தில், கட்டண உயா்வை தவிா்க்க முடியாததாக மாறிவிடும்.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் மற்றும் சுங்கச்சாவடி கட்டண சலுகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.