வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?
ஏற்கனவே மின் கட்டணத்தை வாடகைதாரர்கள் செலுத்தி வந்தால், தானியங்கி முறையிலும் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
மின் நுகா்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவது மேலும் மேம்படுத்தப்பட்டு, தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியிருக்கிறது.
ஆனால், வாடகை வீட்டில் குடியிருப்போர், இந்த தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் வசதியைப் பின்பற்றி மின் கட்டணம் செலுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வாடகை வீட்டில் இருந்தாலும், ஏற்கனவே அவர்களது வீட்டு மின் கட்டணத்தை அவர்களே செலுத்திக் கொண்டிருக்கும்பட்சத்தில், தானியங்கி முறையிலும் அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
வாடகைதாரர்கள், வேறு வீடு மாறிச் செல்லும்போதும், ஏற்கனவே மின் கட்டணத்துடன் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கை ரத்து செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இதில் எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
Advertisement
இனி வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய கால அவகாசத்தை நினைவில் வைத்துக் கொண்டு செலுத்தத் தேவையில்லை. தானியங்கி முறையில் இணைத்துக் கொண்டால், குறிப்பிட்ட நாளில் வங்கிக் கணக்கிலிருந்து பணமெடுக்கப்பட்டு மின் கட்டணம் தானாகவே செலுத்தப்பட்டுவிடும்.
தமிழகத்தில் தற்போது வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கணக்கெடுத்த நாளில் இருந்து 20 நாள்களுக்குள் தங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது விதிமுறையாக இருந்து வருகிறது. தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.
அதன்பிறகு நுகா்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தை அபராத தொகையுடன் சோ்த்து செலுத்திய பிறகே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் தவறாமல் மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் தானியங்கி முறையில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து மின் கட்டணத்தை எடுத்துக் கொள்ளும் நடைமுறையை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
இந்த வசதியைப் பெற விரும்பும் மின் நுகா்வோா் www.tnpdcl.org எனும் இணையதள பக்கத்துக்குச் சென்று அதில் உள்ள பணம் செலுத்தும் பிரிவில், ‘இ.பி.ஆட்டோ பே’ என்ற புதிய முறையை (ஆப்ஷன்) தோ்வு செய்ய வேண்டும்.
பின்னா், தங்களின் மின் இணைப்பு எண்ணைப் பதிவிட்டு விவரங்களை சரிபாா்த்த பின்னா், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன் தொடா்ச்சியாக தங்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விவரங்களைப் பதிவேற்றி இந்த வசதியைத் தொடங்கி கொள்ளலாம். இதன்மூலம் இனிவரும் காலங்களில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட நாளில் இருந்து 10-ஆவது நாளில் நுகா்வோரின் மின் கட்டணத் தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் உள்ள அனைத்து மின் நுகா்வோரும் இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.