கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!
கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கருப்பூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள, தாளங்களுடன் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களின் கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.