எந்த ஆட்சியையும் நாங்கள் கவிழ்த்ததாக வரலாறு இல்லை: இந்திய கம்யூனிஸ்ட்!
எந்த ஆட்சியையும் நாங்கள் கவிழ்த்ததாக வரலாறு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசிக, இடதுசாரிகளின் ஆதரவே போதுமானது; நாங்கள் எந்த ஆட்சியையும் கவிழ்த்ததாக வரலாறு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு.வீரபாண்டியன் இன்று (மே. 28) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் விஜய்யின் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்க வேண்டும். தேசபக்தி பாடல்களுக்கு தமிழகம் எதிரானது அல்ல.
Advertisement
Advertisement
விடுதலைச் சிறுத்தைகள் உள்பட இடதுசாரிகளின் ஆதரவே போதுமானது. சட்ட நெறிகளுக்குப் புறம்பான எந்தச் செயலிலும் ஈடுபட்டு ஆதரவைக் கோருவது என்பது ஏற்புடையது அல்ல. மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இடதுசாரிகள் ஆதரவளித்திருக்கிறோம். ஐந்தாண்டுகள் இந்த ஆட்சி நீடிப்பது நல்லது. ஆனால், இந்த ஆட்சி நல்லாட்சியாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளையும், மக்களுக்கான வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் தொடர வேண்டும். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; மற்றொரு தேர்தல் திணிக்கப்பட்டுவிடக்கூடாது. இந்த இடைப்பட்ட காலத்தை ஆளுநர் பயன்படுத்திவிடக்கூடாது.
பலர் நினைப்பது போல், கல்லெறிவது போல் இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அதற்காகத்தான் அனுப்பியிருக்கிறார். அவர் நினைக்கும்போது கவிழ்த்துவிடுவார் என்று நினைப்பது கணிப்பது எல்லாம் தவறு.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவ்வாறு அல்ல; நூறாண்டு கால வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சி, எந்த ஆட்சியையும் கவிழ்த்ததாக வரலாறு இல்லை. இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்க வேண்டும். அதுதான் மக்களின் விருப்பம். அந்த விருப்பதுக்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.