இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா? தவெக அரசுக்கு ஜவாஹிருல்லா கேள்வி
எதிரணியில் இருப்பவர்களை இழுப்பது என்பது ஜனநாயகத்தின் அற வழி அல்ல என மமக தலைவர் ஜவாஹிருல்லா பேச்சு
எதிரணியில் இருப்பவர்களை இழுப்பதுதான் அவர்கள் (தவெக) சொன்ன மாற்றமா என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களுடன் ஜவாஹிருல்லா பேசியதாவது, "தமிழகத்தில் புதிதாக விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக குற்றச் சம்பவங்கள் அதிகளவில், குறிப்பாக பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த திமுக ஆட்சியை விமர்சித்து, தூய ஆட்சியைத் தருவதாகச் சொல்லித்தான் மக்களிடம் (தவெக) வாக்கு சேகரித்தனர்.
Advertisement
Advertisement
மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. உயரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு, நடத்தை விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு, இந்தக் குற்றச் சம்பவங்கள் நடக்காதவாறு தடுத்து நிறுப்படுவதற்கு இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்று, கடந்த ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் ஒரு படுகொலை நடந்தபோது, அது சரியான முறையில், விசாரணை நடத்தப்பட்டு, அந்தக் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைப் போலவே, குற்றச் சம்பவங்களில் விரைந்து உரிய விசாரணை நடத்தி, தண்டிக்கப்பட வேண்டும்.
வாக்களிக்கும்போது விரல்களில் வைக்கப்பட்ட மை அழிவதற்கு முன்பாகவே, எதிரணியில் போட்டியிட்டவர்களையும், தன் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்களையும்கூட புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இழுப்பது என்பது ஜனநாயகத்தின் அற வழி அல்ல.
இதுபோன்ற ஒரு நிகழ்வு, தமிழ்நாட்டில் இதுவரையில் நடந்ததாகத் தெரியவில்லை. இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுதான் அவர்கள் (தவெக) சொன்ன மாற்றமா? என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்" என்று தெரிவித்தார்.
Is this the change they promised? MMK Leader Jawahirullah questions the TVK government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.