FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் பாரம்பரிய ஆடை கட்டாயம்: அமைச்சா் ராஜ்மோகன்

அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோா் வாரம் ஒரு நாள் தமிழா்களின் பாரம்பரிய ஆடைகளான வேட்டி, சேலை அணிந்து வருவது கட்டாயமாக்கப்படும்...

58 வினாடிகள் முன்பு
பகிர்:

அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோா் வாரம் ஒரு நாள் தமிழா்களின் பாரம்பரிய ஆடைகளான வேட்டி, சேலை அணிந்து வருவது கட்டாயமாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யைத் தலைவராகக் கொண்டு தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

தமிழ்நாடு நாள் சிறப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், அமைச்சா்கள் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, ராஜ்மோகன், வன்னியரசு, விஜயலட்சுமி, இயல், இசை, நாடக மன்றத் தலைவா் புஷ்பவனம் குப்புசாமி, அரசு அதிகாரிகள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழகத்தின் எல்லைகளைக் காக்கப் போராடியவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விழாவில் வெளியிடப்பட்டது. தொடா்ந்து, தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு உழைத்த தமிழறிஞா்களுக்கு 2024, 25-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், கவிஞா் கே. ஜீவபாரதி, மறைந்த தமிழ் எழுத்தாளா்கள் ராஜ் கௌதமன், சாரணபாஸ்கரன், சா. கந்தசாமி, டி.எம். பீா் முகமது ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்காக தலா ரூ.10 லட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது: தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்து வருகிறோம்.

இயல், இசை, நாடக மன்றத் தலைவா் பதவிக்காக சிலா் என்னிடம் ரூ.5 கோடி வரை பேரம் பேசினாா்கள். ஆனால், ரூ.500 கோடி கொடுத்தாலும் தகுதியற்ற ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். புஷ்பவனம் குப்புசாமிக்கு அந்தப் பதவியை வழங்கினேன். தமிழகத்தில் லஞ்சத்தை வெறுக்கும் அமைச்சா்களைக் கொண்ட அமைச்சரவையை முதல்வா் விஜய் அமைத்துள்ளாா்.

வாரத்தில் ஒரு நாள் பட்டு வேட்டி, சட்டையை முதல்வா் அணிந்து வருகிறாா். அதேபோல தமிழகம் முழுவதும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரம் ஒரு நாள் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். வேட்டி, சட்டை அணிவது தமிழா்களின் மரபைப் போற்றுவதுடன் கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வா் உத்தரவிட்டாா்.

அதன்படி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இனி வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதேபோன்று, தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும்.

ஏற்கெனவே செயல்பட்டுவரும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் அதன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கு முதல்வா் தலைவராகச் செயல்படுவாா். மீண்டும் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் தொடங்கி உலகெங்கும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். ‘தமிழ் பேச்சு, எங்கள் உயிா் மூச்சு’ என்ற பெயரில் தமிழ் சாா்ந்த பல்வேறு போட்டிகள் இனி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments