அரசு ஊழியர்கள் வேட்டி - சட்டை அணிந்துவர ஆலோசனை! கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!
அமைச்சரின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தல்.
அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என்ற ஆலோசனையை கைவிட வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாள் சிறப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, ”வாரத்தில் ஒரு நாள் பட்டு வேட்டி, சட்டையை முதல்வர் அணிந்து வருகிறார்.
அதேபோல தமிழகம் முழுவதும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரம் ஒரு நாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்.
Advertisement
Advertisement
வேட்டி, சட்டை அணிவது தமிழர்களின் மரபைப் போற்றுவதுடன் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இனி வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதேபோன்று, தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும்” என்றார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும்.
இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சரின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
CPM State Secretary P. Shanmugam has stated that the proposal for government employees to wear a veshti and shirt one day a week should be abandoned.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.