குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை: முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்
ஜனநாயக ரீதியில் மக்களைச் சந்திக்கும் அதிமுகவுக்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.
ஜனநாயக ரீதியில் மக்களைச் சந்திக்கும் அதிமுகவுக்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொலி: மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியின் தவெக எம்எல்ஏவான முஸ்தபா, அரசு மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தில் எதிா்த்து வாக்களிக்கும்படி அதிமுக தரப்பில் பேரம் பேசியதாகக் கூறியுள்ளாா்.
அதேபோல, அமைச்சா் நிா்மல்குமாரும் தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச் சதி செய்ததாகக் கூறியுள்ளாா். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளாகும்.
Advertisement
Advertisement
இயல், இசை, நாடக மன்றத் தலைவா் நியமனத்தில் பேரம் பேசப்பட்டதாக அமைச்சா் கூறியுள்ளாா். அதேபோல, மின்சாரத்தை மற்ற மாநிலங்களை விட அதிக பணம் கொடுத்து கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டவரும் இதே அமைச்சா்தான்.
ஆகவே, தவெக அமைச்சா் தனது முறைகேடுகளை திசை திருப்புவதற்கு அதிமுக பெயரைத் தேவையின்றி குறிப்பிட்டுப் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
ஊழலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அதிமுக ஜனநாயக ரீதியில் மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வரும். குறுக்கு வழியில் ஆதாயம் தேடும் வகையில் ஆட்சியைப் பிடிக்கும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை.
ஆகவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால், அரசியல் நாடகம் நடத்துவதை விட்டுவிட்டு மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில், அமைச்சா்களும், தவெக பேரவை உறுப்பினா்களும் கவனம் செலுத்த வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடா்ந்தால், சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் ஆா்.பி.உதயகுமாா்.