பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதிலேயே மிகப்பெரும் மோசடியா? சீமான் கண்டனம்
பெரியார் அறிவுலக விவகாரத்தில் சீமான் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதிலேயே மிகப்பெரும் மோசடியா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்தேடலுக்கான இடமான நூலகத்திலேயே, தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் அக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்த நூல்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தது யார்? அவற்றின் விலையை ஏற்றுக்கொண்டது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியது யார்? நானூறு வெண்பாக்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு கவிஞராகச் சித்தரிப்பதும், மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாருக்குப் பதிலாக இல்லாத பெயர்களையும், வரலாற்றையும் முன்வைப்பதும் எத்தகைய அபத்தம்? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே தவறாக எழுதி வைத்துள்ள நூல்களை மாணவர்களும், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களும் படித்தால் என்ன ஆகும்? அறியாமையை அகற்ற வேண்டிய நூலகத்தில், அறியாமையையே அச்சடித்து அடுக்கி வைப்பதுதான் அரசின் சாதனையா? நூல்களின் பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் போலியானவை என்றும், ஆசிரியர்களின் அடையாளங்கள் மற்றும் பதிப்பக முகவரி குறித்துச் சந்தேகங்கள் இருப்பதாகவும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு உடனடியாக விளக்கமளிக்க முன்வர வேண்டும். தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற இம்மாபெரும் முறைகேடு ஆட்சியின் அவல நிலைக்கான சான்றாகும்.
Advertisement
Advertisement
ஒருபக்கம், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது தவெக அரசு. மற்றொரு பக்கம், அறிவுக்கண்ணைத் திறக்க வேண்டிய நூலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது. மக்களைப் பொழுதுபோக்கில் மூழ்கடித்துவிட்டு, அவர்களின் அறிவுத்தேடலையும் மோசடிபேர்வழிகளிடம் ஒப்படைக்க முனைவது பெரும் அவலம் இல்லையா? திரையரங்கத்தில் திரைப்படக்காட்சிகளை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது நூலகங்களின் தரத்தை உறுதிசெய்வதில் காட்டியிருக்க வேண்டாமா? மக்கள் எத்தனை காட்சிகள் திரைப்படம் பார்க்க வேண்டும் எனச் சிந்திக்கும் அரசு, அவர்கள் எத்தகைய நூல்களைப் படிக்கிறார்கள் என்று சிந்திக்காதது ஏன்?
நூலகத்தின் பெருமை என்பது அதன் உயரமானக் கட்டடத்திலும், பளபளப்பான அலமாரிகளிலும் இல்லை; அதற்குள் இருக்கும் நூல்களின் தரத்தில்தான் இருக்கிறது. தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும் மாபெரும் முறைகேடாகும். முந்தைய திமுகவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடையப் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அதேபோல, திட்டத்தை உருவாக்கிய பெருமையை உரிமைகோரும் முந்தைய திமுகவின் ஆட்சியாளர்களும், கொள்முதல் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். எந்தக் காலக்கட்டத்தில், யாருடைய ஒப்புதலுடன் முறைகேடுகள் நடந்திருந்தாலும், அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டியது பேரவசியமாகும்.
ஆகவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான தேர்வுக்குழு விவரங்கள், பரிந்துரைகள், வழங்கல் ஆணைகள், நூல்களின் பட்டியல், விலை மற்றும் பணப்பட்டுவாடா விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், எழுத்தாளுமைகளைக் கொண்ட குழுவின் மூலம் நூல்களின் தரத்தை ஆய்வுசெய்து, தவறான தகவல்கள் கொண்ட போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணையும், சிறப்புத் தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள், விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.