சென்னையில் திடீர் கனமழை! மக்கள் மகிழ்ச்சி!
சென்னையில் திடீர் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக பகல்பொழுதில் நல்ல வெய்யிலும், இரவுபொழுதில் மழையும் பெய்து வருகின்றது. அதன்படி, சென்னையில் இன்று காலை முதல் திடீரென வெய்யிலும், சட்டென்று வானிலை மாறி மேகமூட்டத்துடன் மழை பெய்வதுமாக இருந்தது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி, வங்கக்கடலில் உருவான ஓர்னாப், முரசு ஆகிய இரண்டு புயல்களும் ஆந்திரம் நோக்கி சென்ற நிலையில், அடுத்த புயலாவது சென்னை பக்கம் திரும்புமா என்று அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பிற்பகல் 12.30 மணிக்கு மேல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
சென்னையில் அம்பத்தூர், அன்னாநகர், ஆவடி, கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பட்டரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது.
அதோடு தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.