தீபாவளி பட்டாசுகளால் ராயபுரத்தில் மோசமடைந்த காற்றின் தரம்!
தீபாவளி பட்டாசுகளால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது குறித்து...
தீபாவளி பட்டாசுகளால் ஏற்பட்ட காசு மாசுபாடு காரணமாக சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு 232 ஆகப் பதிவாகியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளியையொட்டி மக்கள் தங்கள் இல்லங்களில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்ததால், பட்டாசு வெப்பது சற்று குறைந்திருந்தது.
Advertisement
Advertisement
எனினும், மாலை நேரத்தில் மழை இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னையில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் காற்றின் தரக்குறியீடு 232 புள்ளிகளை எட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இங்கு காற்றின் தரக்குறியீடு 175 ஆகப் பதிவாகியுள்ளது.
மணலியில் 163 ஆகவும், கொடுங்கையூரில் 154 ஆகவும், அரும்பாக்கத்தில் 151 ஆகவும் காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
சென்னையில் குறைந்தபட்சமாக வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 71 ஆக உள்ளது.
காற்றின் தரம் 101 - 200க்குள் இருந்தால் மிதமானது. 201 - 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மோசமானது. 301 - 400 புள்ளிகளுக்குள் இருந்தால் மிக மோசமானது. 401 - 500 புள்ளிகளை எட்டினால் கடுமையானது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.