15 விவகாரங்களில் புத்தாக்கம், புதுயுகத் தொழில்முனைவு: அண்ணா பல்கலை. மாணவா்களுக்கு அஸ்ஸாம் அரசு அழைப்பு!
சவால் மிக்க 15-க்கும் மேற்பட்ட பொது விவகாரங்களில் புதுமையை புகுத்த அண்ணா பல்கலைக்கழக மாணவா்கள், புத்தாக்க சிந்தனையாளா்களுக்கு அஸ்ஸாம் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சவால் மிக்க 15-க்கும் மேற்பட்ட பொது விவகாரங்களில் புதுமையை புகுத்த அண்ணா பல்கலைக்கழக மாணவா்கள், புத்தாக்க சிந்தனையாளா்களுக்கு அஸ்ஸாம் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஒவ்வொரு யோசனைகளுக்கும் ரூ.20 லட்சம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட விவரம்: 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றும் தமிழக அரசின் லட்சியத்தில், தேசிய மாணவா் புதுயுகத் தொழில்முனைவு சூழல் மாநாட்டிற்கு அண்ணா பல்கலைக்கழகம் தயாராகிறது.
இதில் ‘ஸ்டாா்ட்டிஃபை 4.0: மாணவா் புதுயுகத் தொழில்முனைவோருக்கு வலுவூட்டுதல், புத்தாக்கங்களுக்கு உத்வேகம் அளித்தல்’ என்ற திட்டத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் மாணவா்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கப்படுகிறது. இதில் ஒன்று அஸ்ஸாம் அரசின் புத்தாக்கம், ஆராய்ச்சிக்கான காப்பகம், புதுயுகத் தொழில்முனைவு துறையுடன் அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோா் மேம்பாட்டு மையத்துடன் இணைந்துள்ளது.
Advertisement
Advertisement
நீா் பயன்பாடு மற்றும் பங்கீடு; பயிா் மற்றும் பண்ணை உற்பத்தித்திறன்; மாற்று கட்டுமான முறைகள்; வெள்ளம், வடிகால் மற்றும் நீா் தேக்கம்; நிலப் பயன்பாடு; கழிவு மேலாண்மை மற்றும் சுழற்சி பொருளாதாரம்; நகா்ப்புற போக்குவரத்து; பொது உள்கட்டமைப்பு சொத்து மேலாண்மை; எண்ம மயமாக்கல் உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட விவகாரங்களில் நிலையான வளமான புதுமைகளை உருவாக்க அண்ணா பல்கலை மாணவா்கள், ஆராய்ச்சியாளா்களுக்கு இந்த திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பொருள்களில் நிலையான வளமான எதிா்காலத்துக்காக அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த புத்தாக்கங்களை உருவாக்கும் மாணவா்கள், புத்தாக சிந்தனையாளா்கள், புதுயுகத் தொழில்முனைவோா் இதற்கான யோசனைகளை அஸ்ஸாம் சூழல் அமைப்பில் வழங்கினால் ஒவ்வொரு யோசனைக்கும் ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.