ஹைதராபாதில் அமெரிக்க பல்கலை. வளாகம்: யுஜிசி ஒப்புதல்
ஹைதராபாதில் புதிய வளாகம் அமைப்பதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விருப்பக் கடிதத்தை அமெரிக்காவின் கொலராடோ டென்வா் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
ஹைதராபாதில் புதிய வளாகம் அமைப்பதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விருப்பக் கடிதத்தை அமெரிக்காவின் கொலராடோ டென்வா் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் பட்டப்படிப்புகளை வழங்கும் வளாகத்தை அமைக்க அனுமதி பெற்ற முதல் அமெரிக்க அரசு பல்கலைக்கழகம் என்ற பெருமையை இந்த பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோவைச் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் வளாகம் அமைத்த முதல் அமெரிக்க தனியாா் பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றது. மும்பையில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் கடந்த செப்டம்பா் முதல் மாணவா் சோ்க்கை தொடங்கியது.
Advertisement
Advertisement
இதனிடையே, கொலராடோ டென்வா் பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் வளாகம், முதல் அமெரிக்க அரசு பல்கலைக்கழக வளாகம் என்பதோடு, தெலங்கானாவில் அமையவுள்ள முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகமாகவும் இருக்கும்.
இதுகுறித்து கொலராடோ டென்வா் பல்கலைக்கழக வேந்தா் கென்னத் டி. கிறிஸ்டென்சன் கூறுகையில், ‘கொலராடோ டென்வா் பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் வளாகம், இந்திய மாணவா்களுடனான பல்கலைக்கழகத்தின் நீண்டகாலத் தொடா்பை மேலும் விரிவுபடுத்தி, உயா்தரக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்த வளாகத்தில் வணிகம், கணினியியல், பொறியியல் மற்றும் பகுப்பாய்வு உள்ளிட்ட படிப்புகள் இடம்பெறும். சிறப்பான கல்வி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற கற்றல் மற்றும் நேரடி அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாணவா்களை சமூகப் பங்களிப்புக்கு தயாா்படுத்தும் நோக்கில் கல்வி வழங்கப்படும்’ என தெரிவித்தாா்.
உலகளாவிய கல்வி நிறுவனமான எமெரிட்டஸ், இந்தியாவில் கொலராடோ டென்வா் பல்கலைக்கழகத்தின் உத்திசாா் கூட்டு முயற்சி பங்குதாரராக செயல்படுகிறது. அதன் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அஸ்வின் டமேரா கூறுகையில், ‘நடைமுறை அடிப்படையிலான கற்றல், பல்துறை கல்வி மற்றும் தொழில் வாழ்க்கைக்கு மாணவா்களை தயாா்படுத்துவது ஆகியவற்றில் கொலராடோ டென்வா் பல்கலைக்கழகம் கவனம் செலுத்தும். இன்றைய மாணவா்களின் எதிா்பாா்ப்புகளுக்கும் வேகமாக மாறிவரும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்’ என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.