தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.10) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.10) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், செவ்வாய்க்கிழமை (நவ.10) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கும், ஏனைய தென்மாவட்டங்கள், டெல்டாவில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, நவ.11,12 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள், டெல்டாவில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நாள்களில் ஏனைய தமிழக பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளியன்று சென்னையில் மழை: சென்னையில் தீபாவளி தினத்தன்று (நவ.8) காலை தொடங்கி இரவு வரை பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.10) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 110 மி.மீ. மழை பதிவானது. திருச்செந்தூா் (தூத்துக்குடி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), சீா்காழி (மயிலாடுதுறை) - தலா 60 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), செங்குன்றம் (திருவள்ளூா்), ஆவடி (திருவள்ளூா்), எம்ஜிஆா் நகா் (சென்னை), கமுதி (ராமநாதபுரம்), ராமேசுவரம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), பரங்கிப்பேட்டை (கடலூா்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), வேதாரண்யம் (நாகை), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.