பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினேனா? தவெக எம்எல்ஏ விளக்கம்!
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகப் பரவும் தகவலுக்கு தவெக எம்எல்ஏ விளக்கம்.
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு, நான் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகப் பரவும் தகவல் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என்று கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்து, தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் இன்று (நவ. 10) புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “என்னை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுகவினர் வதந்திகளைப் பரப்புகின்றனர். என் மீதும் தவெக ஆட்சி மீதும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் ரவுண்டானா அருகே கடந்த திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் முறையான கட்டமைப்பில் இல்லை.
புதிய பேருந்து நிலையம் தொடர்பாக நான் முதல்வருக்கு அறிக்கை அனுப்பியதால், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்
இது போன்று அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.