FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 நவம்பர் 2026, 3:05 am
மண்டல வானிலை ஆய்வு மையம் - (கோப்புப்படம்)
பகிர்:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ. 13) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்; இதன் காரணமாக தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ.13) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதேபோல், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் புதன்கிழமை (நவ. 11) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மேலும், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.12) ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 130 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி) 110 மி.மீ., காக்காச்சி, களக்காடு (திருநெல்வேலி) 90 மி.மீ. மழை பதிவானது.