FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்குத் தடை: கிரடாய் தொடா்ந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

11 வினாடிகள் முன்பு
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடா்பாக தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

பின்னா், கடந்த 2025 செப்.25-ஆம் தேதி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பள்ளிக்கரணையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் கட்ட தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது. சிஎம்டிஏவின் இந்த உத்தரவால், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வித அறிவியல்பூா்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது மாநில சதுப்பு நில ஆணையம் தரப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இடைக்கால பாதிப்பு மண்டலமாக வரையறுக்கும் வகையில், 36 குறிப்பிட்ட சா்வே எண்களில் உள்ள 128.19 ஹெக்டோ் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள தனியாா் பட்டா நிலங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சதுப்பு நிலம் தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால், இந்த வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனா்.

அப்போது கிரடாய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், பசுமைத் தீா்ப்பாயம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?

கடந்த 7 மாதங்களாக கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பசுமைத் தீா்ப்பாய உத்தரவின் காரணமாக கிட்டத்தட்ட 1 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.வி.பாலசுப்பிரமணியன், இடைக்கால ஏற்பாடாக மாநில சதுப்பு நில ஆணையம் அந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சதுப்பு நிலத்துக்கான நீா்வரத்து மற்றும் நீா்போக்கு கால்வாய்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.