FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செந்தில் பாலாஜி மீதான வழக்கு; வழக்கை இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது: நீதிமன்றம் எச்சரிக்கை!

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

26 வினாடிகள் முன்பு
செந்தில் பாலாஜி - கோப்புப் படம்
பகிர்:

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடி வழக்கை, இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2011-2015 ஆம் ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறையின் பணி நியமனங்களை, பணம் பெற்றுக் கொண்டு நிரப்பியதாக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 2,200-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.லோகேஷ்வரன் முன் இன்று (நவ. 12) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வழக்கு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எப்போது மனுத் தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தேவையின்றி வழக்கை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என்றும், விருப்பம்போல, மனு தாக்கல் செய்வதாக இருந்தால், ஜாமீனை ரத்து செய்துவிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட குற்றம்சாட்டப்ப்டடவர்களிடம், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எப்போது மனு தாக்கல் செய்ய உள்ளீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, விரைவில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

summary

The special court has warned the accused that it will not tolerate any actions aimed at delaying the case involving fraud, in which they allegedly promised to secure jobs in the transport department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.