சென்னை கண்ணகி நகரில் 6,508 குடியிருப்புகளில் ரூ.49.29 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள்: அரசாணை வெளியீடு
சென்னை கண்ணகி நகரில் 6,508 குடியிருப்புகளில் ரூ.49.29 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளுக்கான அரசாணை குறித்து...
சென்னை கண்ணகி நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், 6,508 குடியிருப்புகளை உள்ளடக்கிய 673 குடியிருப்புக் கட்டடத் தொகுதிகளில் ரூ.49.29 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் படி இந்த பணிகளை மேற்கொள்ளவதற்கான அரசாணை எண். G.O.(4D) No.41, நவ.6 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கண்ணகி நகர் குடியிருப்புத் திட்டம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 1996 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கண்ணகி நகரில் மொத்தம் 15,656 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணத் திட்டம், 10-வது, 11-வது மற்றும் 12-வது நிதிக்குழு திட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டன.
மொத்தம் 137.54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்ணகி நகரில், சாலை வசதிகள், தெருவிளக்குகள், பேருந்து நிலையம், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள்
கண்ணகி நகரில் 2023–2024 ஆம் ஆண்டில் 4,936 குடியிருப்புகளில் ரூ.19.69 கோடி செலவில் மாநில அரசு நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, 2024–2025 ஆம் ஆண்டில் 176 குடியிருப்புகளில் ரூ.1.02 கோடி செலவில் வக்ஃப் வாரிய நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, 2025–2026 ஆம் ஆண்டில் 4,036 குடியிருப்புகளில் ரூ.20.52 கோடி செலவில் தங்குமிட நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 9,148 குடியிருப்புகளில் ரூ.41.23 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள்
தற்போது 6,508 குடியிருப்புகளை உள்ளடக்கிய 673 குடியிருப்புக் கட்டடத் தொகுதிகளில் ரூ.49.29 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணிகளின் கீழ், குடியிருப்புகளின் மேற்கூரை மற்றும் சுவர்களில் பூச்சுப் பணிகள், பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளில் தரைத்தளப் பணிகள், மொட்டை மாடியில் சேதமடைந்த தரைத்தள ஓடுகளை அகற்றி சூரிய வெப்பத்தைப் பிரதிபலிக்கும் ஓடுகள் பதித்தல், கழிப்பறைகளில் தரை மற்றும் சுவர் ஓடுகள் பதித்தல், சேதமடைந்த சுகாதாரக் குழாய்களை மாற்றுதல் மற்றும் இதர அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒரு குடியிருப்பிற்கு சராசரியாக ரூ.75,000 வீதம் இப்பணிகளுக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுஇந்த திட்டத்திற்கான ரூ.49.29 கோடி நிதியானது மாநில அரசு நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணகி நகரில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தவும், குடியிருப்புக் கட்டடங்களின் நீடித்த பயன்பாடு மற்றும் கட்டமைப்பு உறுதித்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.