சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 10 வழிச்சாலையாக மாற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 10 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 10 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளில் கடந்த 6 மாத காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள், முன்னெடுப்புகள் குறித்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 5,226 பள்ளிகளை ஆய்வு செய்துள்ளோம். அரசுப் பள்ளிகளில் 15,661 கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
Advertisement
Advertisement
தமிழகத்தில் 8 வழி, 10 வழிச்சாலைத் திட்டம் தொடா்பாக நவ. 17-ஆம் தேதி மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்திக்க உள்ளேன். அப்போது சென்னை-கன்னியாகுமரி இடையே 10 வழிச்சாலை அமைப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்படும். சென்னை - மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே பயணிகள் படகு பயணம் தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி போன்ற முதல்கட்ட பணிகளை தொடங்கி உள்ளோம்.
கடந்த ஆட்சியில் தோ்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன் நெடுஞ்சாலை துறையில் சாலையில் உள்ள பள்ளம் மூடுவது போன்ற பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் செய்துள்ளனா். திருவான்மியூா் முதல் உத்தண்டி வரையிலான உயா்நிலை சாலைத் திட்டம் ஆலோசனைக் குழு வசம் சென்றுள்ளது. இத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. திட்டத்தை மீண்டும் மேற்கொண்டால், மறு ஒப்பந்தப்புள்ளிதான் விடப்படும். தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயா்நிலை சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு ஏப்ரலுக்குள் திறக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் பணிகள் முறையாக நடக்கவில்லை. சாலை மற்றும் வடிகால் திட்டத்தை இனி நெடுஞ்சாலை துறையே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலப் பாதைக்கு தனிச் சாலை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மேலும் விளையாட்டு நகரம் உருவாக்குதல், 10 இடங்களில் ஒலிம்பிக் அகாதெமி, 38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதி கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 25,000 முதல் 30,000 வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.